*மஹாலக்ஷ்மி தாயிடம் சரணாகதி🌹
மஹாலெட்சுமி தாயிடம் சரணாகதி அடையும்போது, அவள் நம்மை கடாக்ஷிப்பதுடன், அவளுடைய ஸ்தானத்துக்கு நம்மையும் உயர்த்தி விடுவாள். இதுதான் மஹாலக்ஷ்மியின் கருணை!
அவளைத் தேடித்தேடிச் சரணடைய, உரிய தலங்களை நாம் நாடியோட வேண்டும். இங்கே அத்தகைய சில தலங்கள் பற்றி, குறிப்பிட்டுச் சொல்லியே ஆகவேண்டும்.
கடிகாசலம் என்னும் சோளிங்கர் திருத்தலத்தில் தாயாருக்கு அமிர்தவல்லி நாச்சியார் என்று திருநாமம். தன்னையே அமிர்தமாக அந்த யோக நரஸிம்மருக்குக் கொடுத்தவள். மஹாலக்ஷ்மியாகிய அமிர்தவல்லி நாச்சியார் பெருமாளின் திருமார்பில் நீங்காமல் இருப்பதால், பக்தர்களை எல்லாம் கூப்பிட்டு அனுக்கிரஹம் பண்ணுவதுபோல் பெருமாள் திருக்காட்சி தருகிறார்.
அதேபோல், கமலாதேவி என்னும் திருப்பெயர் கொண்டு மஹாலக்ஷ்மி எழுந்தருளி இருக்கும் திருத்தலம் உறையூர் அழகிய மணவாளர் திருக்கோயில். இங்கே பிராட்டிக்கு கமலவல்லி என்ற திருநாமம். இந்தத் தலத்தில்தான் திருப்பாணாழ்வார் அவதரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மகாலக்ஷ்மி தாயார் எத்தனையோ திவ்வியதேசங்களில் எழுந்தருளி நம்மையெல்லாம் கடாக்ஷிப்பதற்காகக் காத்துக்கொண்டு இருக்கிறாள். இந்த திவ்வியதேசங்களில் மகாலக்ஷ்மி தாயாருடன் தாயின் அம்சமான பூமிதேவி, நீளாதேவியும் உடன் இருந்தாலும் மகாலக்ஷ்மியே பிரதானம். பகவான் எப்போதும் இந்த மூன்று தாயாருடனே திருக்காட்சி தருவார். இதனையே நம்மாழ்வார்,
‘உடனமர் காதல்மகளிர் திருமகள் மண்மகள்ஆயர்மடமகள் என்றிவர் மூவர்…’ என்றும்,
‘கூந்தல்மலர்மங்கைக்கும் மண்மடந்தைக்கும் குலவாயர் குலக்கொழுந்துக்கும் கேள்வன்தன்னை…’
என்றும் பாடி இருக்கிறார்.
மகாலக்ஷ்மி தாயாரின் கடாக்ஷம் நமக்கெல்லாம் கிடைக்கச் செய்யும் எத்தனையோ பல திவ்வியதேசங்கள் நம்முடைய புண்ணியபூமியில் அமைந்திருக்கின்றன. அப்படி இருக்க, மகாலக்ஷ்மி தேவியின் கடாக்ஷம் அனைவருக்கும் கிடைத்திருக்க வேண்டும் அல்லவா… ஆனால், கிடைக்கவில்லையே? என்ன காரணம் என்று நாம் சிந்திக்க வேண்டும்.
சிந்தித்தால், நாம் பரிபூரணமாக அவளிடம் சரணாகதி பண்ணவில்லை என்ற உண்மை நமக்குப் புரியும்.
ராமாயணத்தில் ராவணனுக்கு அறிவுரை சொல்லி வந்த விபீஷணன், இரண்ய வதத்தைப் பற்றி குறிப்பிடும்போது, இரண்ய வதத்தினால் நரஸிம்ம மூர்த்திக்கு ஏற்பட்ட சினத்தின் உக்கிரத்தைத் தணிவிக்க, தேவர்கள் மகாலக்ஷ்மி பிராட்டியாரை நரஸிம்ம பெருமாளுக்கு அருகில் அனுப்பி வைத்து சினத்தின் உக்கிரத்தைத் தணிவித்ததாக கூறினான். இதைப் பற்றி விவரிக்க வந்த கம்பர்,
’பூவில் திருவை அழகின் கமலத்தை!
யாவர்க்கும் செல்வத்தை வீடு என்னும் இன்பத்தை! ஆவித்துணையை அமுதின் பிறந்தாளை! தேவர்க்கும் தாயை…’
அதாவது, தாமரை மலரின்மேல் இருந்தபடி அருளும் அந்த தேவியானவள், அமுதத்தோடு பிறந்தவள்; அனைவருக்கும் செல்வத்தை அருள்பவள்; வீடு என்னும் பேரின்பத்தையும் நமக்கெல்லாம் அருள்பவள் என்று போற்றுகிறார்.
இந்திரனுக்கு அவன் இழந்த செல்வத்தைத் திரும்பவும் அருளியவள் கருணையே வடிவான மகாலக்ஷ்மி தாயார். அவளுடைய திருக்கோயில்களை நாடிச் சென்று அவளுடைய திருவடிகளைச் சரண் அடைந்தால், அவளுடைய கடாக்ஷம் நமக்கெல்லாம் பரிபூரணமாகக் கிடைக்கும்.
ஸ்ரீ மஹாலக்ஷ்மி திருவடிகளே சரணம்🌷