10.02.2024 முதல் சியாமளா நவராத்திரி அனுஷ்டிக்கப்படுகிறது.அனைத்து சக்தி ஸ்தலங்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றது.முக்கியமாக ச்யாமளாவின் அம்சமாகத் திகழும் மதுரை மீனாக்ஷிக்கு சியாமளா நவராத்திரி விஷேசம் என்பது குறிப்பிடத்தக்கது.
சியாமளா நவராத்திரி பூஜை
தை அமாவாசை கழிந்த மறுநாள் பிரதமையிலிருந்து நவமி வரை 10.02.2024 முதல் 19.02.2024வரை அம்பிகையை, பூரண கலசத்தில் ஆவாஹனம் செய்து, பூஜிக்கலாம். சியாமளா நவராத்திரியில் ஐந்தாவது தினமான வசந்த பஞ்சமியில் ஸ்ரீ சரஸ்வதி தேவி திருஅவதாரம் செய்ததாக ஐதீகம். எனவே, தென்னாட்டில் விஜயதசமி போல், வடநாட்டில் வசந்த பஞ்சமி அன்று வித்யாரம்பம் செய்கிறார்கள். அன்றைய தினம் அம்பிகையை வழிபடுபவருக்கு, கலைகள் அனைத்திலும் நிறைந்த பேராற்றல் கிட்டும்.
சரஸ்வதி தேவியின் தாந்த்ரீக ரூபமே ஸ்ரீ ராஜ சியாமளா தேவி.தாந்த்ரீக முறையில் வழிபடப்படும், தச மஹா வித்யைகளுள் மாதங்கி தேவி ஒன்பதாவது வித்யாரூபமாகப் போற்றப்படுகிறாள். கல்வி அறிவைத் தந்து நம்மை வல்லவர்களாக்கும் சக்தி படைத்தவள் சரஸ்வதி தேவி. கலைவாணியான சரஸ்வதி தேவியின் ஸ்வரூபமான ச்யாமளாதேவியை பிரதானமாகக் கருதி, ஆராதனை செய்து வணங்கும் நாட்கள் தான் ச்யாமளா நவராத்திரி தினங்களாகும்.
சியாமளா தேவி:- சியாமளா என்றும், 'ஸ்ரீ ராஜ ச்யாமளா என்றும், ஸ்ரீமாதங்கி என்றும், 'மஹாமந்திரிணீ' என்றும் பலவித திருநாமங்களால் போற்றப்படும் ஸ்ரீ அம்பிகை, மதங்க முனிவரின் தவப்புதல்வியாக அவதரித்தருளியவள். தசமஹாவித்யைகளுள் ஒன்பதாவது வித்யையாக அறியப்படுபவள். கலைகள், பேச்சுத்திறன், நேர்வழியில் செல்லும் புத்தி, கல்வி, கேள்விகளில் மிக உயர்ந்த நிலையை அடையும் திறன் ஆகியவற்றுக்கு அதிபதியாக அறியப்படுபவள். வேத மந்திரங்களுக்கு எல்லாம் அதிதேவதை ஆதலால் 'மந்திரிணீ' என்று அறியப்படுபவள். ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் மஹாமந்திரியாக, இவ்வுலகை ஆட்சி செய்து அருளுபவள். இந்த அம்பிகையைப் போற்றும் விதமாகவே ச்யாமளா நவராத்திரியைக் கொண்டாடி வழிபடுகிறோம்.
ஸ்ரீ ராஜ மாதங்கி, ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியால், தன் கரும்பு வில்லில் இருந்து உருவாக்கப்பட்டவள். அம்பிகையின் பிரதிநிதியாக, ராஜ்ய பாரம் நடத்துபவள். அம்பிகையின் முத்ரேஸ்வரியாக, (முத்திரை மோதிரம் தாங்கியவளாக) இருப்பவள். இதை ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம், வெவ்வேறு விதமான புராணங்களிலும் தாந்தீரிக முறைகளிலும் வெவ்வேறு விதமாக அம்பிகையின் திருவுருவம் விவரிக்கப்படுகிறது.
கவி காளிதாசர் அருளிய ஸ்ரீ ச்யாமளா தண்டகம், தியான ஸ்லோகத்தில், அம்பிகை, மாணிக்கக் கற்கள் பதித்த வீணையை வாசிப்பதில் விருப்பம் உடையவளாக, எட்டுத் திருக்கரங்கள் உடையவளாக, மரகதப் பச்சை வண்ணம் கொண்டவளாக, திருமார்பில் குங்குமச்சாந்து தரித்தவளாக, தன் திருநெற்றியில், சந்திரகலையை அணிந்தவளாக, கரங்களில், கரும்பு வில், மலரம்பு, பாச அங்குசம் கொண்டவளாக சித்தரிக்கப்படுகிறாள். அம்பிகையின் திருக்கரங்களில் கிளியும் இடம்பெற்றிருக்கிறது.
இதில் அம்பிகையின் மரகதப் பச்சை வண்ணம், ஞானத்தைக் குறிக்கிறது. வித்யாகாரகனான புத பகவானுக்கு உரிய நிறமும் பச்சையே. வீணை, சங்கீத மேதா விலாசத்தையும், கிளி, பேச்சுத் திறமை வாய்க்க அம்பிகையின் அருள் அவசியம் என்பதையும் ஆத்ம ஞானத்தையும் குறிக்கிறது. மலரம்பு கலைகளில் தேர்ச்சியையும், பாசம் ஈர்க்கும் திறனையும், அங்குசம் அடக்கியாளும் திறனையும், கரும்பு உலகியல் ஞானத்தையும் குறிப்பதாகக் கருதப்படுகிறது.
சில நூல்களில், ஸ்ரீ சியாமளா, பச்சை வண்ணம் உடையவளாக, சிரசில் சந்திரகலையை அணிந்தவளாக, நீண்ட கேசமும் புன்முறுவல் பூத்த அழகுத் திருமுகமும் உடையவளாக, இனிமையான வாக்விலாசம் உடையவளாக, ஆகர்ஷணம் பொருந்திய திருவிழிகள் உடையவளாக, கடம்ப மாலையும், பனை ஓலையினாலான காதணி மற்றும் பல்வேறு ஆபரணங்கள் தரித்து தாமரை மலர் மீது அமர்ந்திருப்பவளாகவும் சித்தரிக்கப்படுகிறாள்.
கடல்போல் விரிந்த ஞானத்திற்கும், உள்முகமான அறிவாற்றலுக்கும் மாதங்கி தேவியே அதிதேவதை. மனதில் தோன்றுவதை சாமர்த்தியமாக வெளிப்படுத்தும் நல்லாற்றலும், எதையும் கிரகிக்கும் திறனும், கிரகிப்பதைப் பிறர் விரும்பும் வண்ணம் வெளிப்படுத்தும் திறனும், ஸ்ரீமாதங்கியின் அருளாலேயே சித்திக்கும். மேலும், ஒருவர் பேசும் வாக்கியத்தின் மத்திமப் பகுதியே அவர் மனதில் நினைத்திருப்பதை வெளிப்படுத்துவதாக அமையும்.இந்த மத்திமப் பாகத்துக்கும் மாதங்கி தேவியே அதிதேவதை. நுண்ணறிவுக்கும் அதை வெளிப்படுத்தும் திறனுக்கும் மனதை அறிவின் மூலம் கட்டுப்படுத்தி அம்பிகையிடம் லயிக்கச் செய்யும் ஆற்றலுக்கும் அம்பிகையின் அருள் அவசியம்.
ஜெகன் மாதா ஸ்ரீலலிதா மகாதிரிபுர சுந்தரியின் கையிலிருக்கும் கரும்பு வில்லின் அதிதேவதையான சியாமளா தேவி, அறிவு என்னும் தத்துவத்தின் தலைவியாக விளங்குபவள். மனம் என்னும் வில் தான், அறிவு என்னும் அம்பை கட்டுப்படுத்துகிறது.எனவே சியாமளா தேவியின் அருள் இருந்தால் தான் மனதையும் அறிவையும் அடக்கி , அம்பிகையிடம் நம்மை லயிக்கச் செய்ய முடியும்.
தனது மந்திரியான சியாமளா தேவியின் ஆலோசனை பெற்றே அம்பிகை ஸ்ரீலலிதா பரமேஸ்வரி எதையும் செய்வாள். இதனால் சியாமளா தேவிக்கு மந்த்ரிணி என்னும் பெயருமுண்டு. அம்பிகையின் வலப்புறம் வீற்றிருக்கும் பெருமை கொண்ட சியாமளா தேவி,மன இருளை அகற்றி ஞான ஒளியைத் தருபவள்.
தேவியின் ஒன்பதாவது வடிவமான சியாமளா தேவியை உஜ்ஜயினியில் வணங்கியதால் மூடனாயிருந்த காளிதாசன் மகாகவியானான் என்கிறது புராணம். மூடமாய் முடங்கிக் கிடந்த காளிதாசனுக்கு அன்னை சியாமளா தேவியின் பெருங்கருனை மகாகவியாக மாற்றியது.மதங்க முனிவரின் மகளாகப் பிறந்ததால் மாதங்கி என்றும் அழைக்கப்படுகிறாள்.
சியாமளா தேவியை தியானிப்பவர்களுக்கு வாக்கு , இசை, கல்வி, கேள்விகளில் நல்ல தேர்ச்சி போன்றவை சித்திக்கும்.
மாதங்கியின் பதினாறு பெயர்களைப் பற்றி பார்ப்போம்.
சங்கீத யோகினி, சியாமா, சியாமளா, மந்த்ர நாபிகா, மந்த்ரிணி, சசிவேசானி, ப்ரதானேசி, சுகப் பிரியா, வீணாவதி, வைணிகி, முத்ரிணி, பிரிய கப்பிரியா, நீபப்பிரியா, கதம்பேசி, கதம்பவன வாசினி, சதாமாதா ஆகியவையாகும்.
மாதங்கி தேவி எட்டு கரங்களை உடையவள். அவளுடைய ஒரு திருக்கரத்தில்உள்ள சம்பா கதிர், உலகியல் இன்பங்களையும், மற்றொரு கரத்திலுள்ள தாமரை மலர், கலை உள்ளத்தையும்,இன்னொரு கரத்திலுள்ள பாசம் ஈர்ப்பு சக்தியையும்,வேறொரு கரத்திலுள்ள அங்குசம் அடக்கியாளும் திறனையும்; காரிகை உலகியல் ஞானத்தையும்; கிளி ஆத்ம ஞானத்தையும், இரு கைகளில் ஏந்திய வீணை சங்கீத ரசனையையும் அருளுகின்றன. மேற்கண்ட வடிவுடைய தேவியையே காளிதாசனின் சியாமளா தண்டகம் கொண்டாடுகிறது. சியாமளா தண்டகத்தை துதிப்பவர்களுக்கு தேவி பேரருள் புரிகிறாள்.
காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் சியாமளா தேவியின் திருவுருவத்தைக் காணலாம். மந்திர சாஸ்திரப்படி மதுரை மீனாட்சியே சியாமளா தேவியாக விளங்குகிறாள் என்பது சான்றோர் நம்பிக்கை. அதனால் தான் அங்கு எண் கை வடிவமும் சக்கரமும் இதன் அடிப்படையிலேயே அமைக்கப்பட்டுள்ளன.
சியாமளா தேவிக்கு லகு மாதங்கி, வாக்வாதினி, நகுலி எனப்படும் மூன்று அங்க- உபாங்க தேவதைகள் உள்ளனர். அதற்கான விளக்கங்களையும் தெரிந்துக்கொள்வோம்.
லகு மாதங்கி:- மாணிக்கமயமான வீணையை வாசிப்பவளும், அழகான வாக்கு உடையவளும், நீலநிற ஒளி பொருந்திய உடலினளும், மதங்க முனிவரின் மகளுமான இவள் அருள் இருந்தால் அனைத்து கலைகளும் லகுவாகும்.
வாக்வாதினி:- நம் சந்தேகங்களை குருவிடம் கேட்டு அறிய வேண்டும் என்பதே வாக்வாதினியின் பொருள். அடிக்கடி குருவிடம் சென்று நம் சந்தேகங்களைக் கேட்டாலொழிய உண்மைப் பொருளை அறிய முடியாது. சில விஷயங்களை ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்தால்தான் உண்மையை உணர முடியும்.
நகுலி :- ஞானத்தை அடைந்தால்கூட தவறு செய்வதற்கான சில சந்தர்ப்பங்கள் ஏற்படலாம். விஷம் போன்ற அத்தவறுகளால் நாம் பாதிக்கப்படாமல் காப்பாற்றுபவள் நகுலி. நகுலம் என்றால் கீரிப்பிள்ளை. கீரியைக் கண்டு விஷப் பாம்புகள் அஞ்சி விலகு வதைப்போல நகுலியின் அருளால் தவறுகள் நம்மை விட்டு விலகிச் செல்லும் என்பது உட்கருத்து.
சியாமளா சகஸ்ரநாமம், ராஜமாதங்கி சகஸ்ரநாமம் என இரண்டு அதியற்புதமான சகஸ்ரநாமங்கள் உள்ளன. இவற்றைத் துதித்துப் பயனடையலாம். காளிதாசனின் சியாமளா தண்டகமும் மிக அற்புதமானதே. ஆதிசங்கரரின் மீனாட்சி பஞ்சரத்னத்தைத் துதித்தாலும் சிறப்பான பயன்களைப் பெறலாம்.
ச்யாமளா நவராத்திரி நாட்களில் ச்யாமளா தேவியை வணங்கி கல்வி கடவுளான சரஸ்வதியில் அருளோடு சரஸ்வதி யோகத்தையும் பெற்று மகிழ்வோமாக!
🪷🪷🪷🪷🪷🪷
Friday, February 9, 2024
சியாமளா நவராத்திரி பூஜை
Subscribe to:
Posts (Atom)
செல்வத்துக்கு அதிபதியாக திகழும் குபேரன்:
பக்தியுடன் பூஜிப்போர்க்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருள்பவர். அழகாபுரி பட்டணத்தில், அழகிய அரண்மனையில், மீன ஆசனத்தில் அமர்ந்து ஆட்சி புரிபவர். த...

-
ஜெய் ஶ்ரீ ராம் 🙏🏽🕉🥀✡🌼🌸🌻🙏 ராமாய ராமபத்ராய ராமசந்திராய வேதசே ! ரகுநந்தாய நாதாய சீதாய பதயே நம!! 🙏🌺🕉🌹☀🌸🔆💢🏵🌷🙏 ஸ்ரீ ராம ராம ரா...
-
Kaithala Niraikani - Thirupugazh - Tamil Lyrics Kaithala Niraikani - Thirupugazh - English Lyrics Kaithala Niraikani - Thirup...
-
Sri Devi Khadgamala Stotram in Tamil ஶ்ரீ தேவீ கட்கமாலா ஸ்தோத்ரம் பாடல் வரிகள் (sri devi khadgamala stotram) இந்த பதிவில் பதிவிடப்பட்டுள்ளது...