Showing posts with label Pooja /பூஜை. Show all posts
Showing posts with label Pooja /பூஜை. Show all posts

Tuesday, March 12, 2024

மகா சிவராத்திரி பூஜை காலங்கள்

 மகா சிவராத்திரி பூஜை காலங்கள்

முதல் கால பூஜை -  இரவு, 6:30- 9:30 pm;

இரண்டாம் கால பூஜை இரவு 9:30-12:30 pm;

மூன்றாம் கால பூஜை நள்ளிரவு 12:30- 3:30 am,

நான்காம் கால பூஜை அதிகாலை, 3:30-6:00 am..



மாசி மாதம் கிருஷ்ண பக்ஷ சதுர்தசியன்று வருவது மஹா சிவராத்திரி. பல்வேறு வகையான பெரிய நலன்களை இது வழங்குவது. மற்ற சிவராத்திரிகளில் பெறும் எல்லா பேற்றையும் இது ஒரு சேர வழங்குவதால் இது மஹாசிவராத்திரி என்று போற்றப்படுகிறது. மஹா சிவராத்திரியில் நான்கு காலங்களிலும் இரவில் பூஜை செய்ய வேண்டும். சிவபஞ்சாயதனம் கைக் கொண்டவர்கள் இரவில் பூஜையைத் தரித்து நற்பலன் பெற வேண்டும்.

சிவராத்திரியின் போது இரவு நான்கு சாமங்களாகப் பிரிக்கப்படுகிறது. அந்த நான்கு யாமங்களிலும் சிவலிங்கத்துக்கு விசேஷேமாக அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன.

முதல் சாமம்: 

இந்த முதல்கால பூஜை, படைக்கும் தேவன் "பிரம்மா" சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும். இந்த கால பூஜையில் "பஞ்ச கவ்வியத்தால்" (பசும்பால், பசுந்தயிர், பசுநெய், கோமயம், கோசாணம்) அபிஷேகம் செய்து, மஞ்சள் நிற பொன்னாடை அணிவித்தும், தாமரைப் பூவால் அர்ச்சனையும், அலங்காரமும் செய்து, பாசிப் பருப்பு பொங்கல் நிவேதனமாக படைத்து, நெய் தீபத்துடன் முதல் கால பூஜை ரிக் வேதபாராயணத்துடன் நடத்தப்படுகின்றது. இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் நம் பிறவி கர்மாக்களில் இருந்து விடுபட்டு நற்பலன்களை அடையலாம்.





இரண்டாம் சாமம்: 

இந்த இரண்டாவது காலை பூஜையை காக்கும் தேவன் "விஷ்ணு". சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும். இந்த காலத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தும், சந்தன காப்பு சாற்றியும், வெண்பட்டு ஆடை அணிவித்து அலங்காரம் செய்தும், அர்ச்சனைகள் செய்தும், இனிப்பு பாயசம் நிவேதனமாக படைத்து, நல்லெண்ணை தீபத்துடன், இரண்டாவது கால பூஜை யஜுர்வேத பாராயணத்துடன் நடத்தப்படுகின்றது. இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் தன தானிய சம்பத்துக்கள் சேரும்.

மூன்றாம் சாமம்: 

இந்த பூஜை சக்தியின் வடிவமாக அம்பாள் பூஜிப்பதாகும். இந்த காலத்தில் தேன் அபிஷேகம் செய்தும் பச்சை கற்பூரம் மற்றும் வில்வ இலையைக் கொண்டு அலங்காரம் செய்தும், சிவப்பு வஸ்திரம் அணிவித்தும், ஜாதி மல்லி பூவைக் கொண்டு அர்ச்சனைகள் செய்து "எள் அன்னம்" நிவேதனமாக படைத்து, இலுப்பை எண்ணை தீபத்துடன் சாமவேத பாராயணத்துடன் பூஜை முடிக்கப்படுகிறது. இந்த காலத்திற்குரிய சிறப்பு என்றால் இதை லிங்கோத்பவ காலம் என்றும் இந்த காலத்தில் சிவபெருமானின் அடி முடியைக் காண வேண்டி பிரம்மா அன்ன ரூபமாக மேலேயும், மகாவிஷ்ணு வராக ரூபமாக பாதாள லோகத்தையும் தேடிய சிறப்புடையது இந்த காலம். இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் எந்தவித தீய சக்தியும் நம்மை அண்டாமல் இருக்க சக்தியின் அருள் கிடைக்கும்.

நான்காம் சாமம்: 

இந்த நான்காவது கால பூஜை முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூதகணங்களும், மனிதர்களும் அனைத்து ஜீவராசிகளும் சிவபெருமானை பூஜிப்பதாக கருதப்படுகிறது. குங்குமப்பூ சாற்றி, கரும்பு சாறு & பால் அபிஷேகம் செய்தும், நந்தியாவட்ட பூவால் அலங்காரமும், அர்ச்சனையும் செய்து அதர்வண வேதப் பாராயணத்துடன் சுத்தான்னம் நிவேதனமாகப் படைத்தும், தூப தீப ஆராதனைகளுடன் 18 வகை சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் செய்யப்படுகிறது. மிக உயர்வான இந்த மகா சிவராத்திரி விரதத்தை இருந்து சிவபெரு மானை வழிபட்டு அனைத்து செல்வத்தையும், வாழ்வில் மகிழ்ச்சியையும் அடைவோமாக


Thursday, February 22, 2024

உபவாச விரதங்களில் எதை கடைபிடித்தால் நல்லது

 

 உபவாச விரதங்களில் எதை கடைபிடித்தால் நல்லது




27 வகையான உபவாச விரதங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது புராணத்தில் அவை

  1. உமிழ்நீரை கூட விழுங்காமல் இருப்பது இதை யோகிகள் மட்டுமே கடைபிடிப்பார்கள்
  2. தேன் அல்லது இளநீர் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்
  3.  பசுவின் பாலில் மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்
  4. எந்த உணவும் இல்லாமல் தொடர்ந்து 12 நாட்கள் நீரை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்
  5. காலை நேரம் மட்டும் உணவருந்தி உபவாசம் இருத்தல்
  6. பகல் நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்
  7. இரவு நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்
  8.  மூன்று நாட்கள் தொடர்ந்து காலை நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்
  9. மூன்று நாட்கள் தொடர்ந்து மதிய நேர உணவை மட்டும் சாசாப்பிட்டு உபவாசம் இருத்தல்
  10.  மூன்று நாட்கள் தொடர்ந்து இரவு நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்
  11.  கடுமையான விரதங்களுக்கு 21 நாட்கள் வெறும் பசும்பால் மட்டும் அருந்தி உபவாசம் இருக்கலாம்
  12. மூன்று நாட்கள் பகல்வேளை மூன்று கைப்பிடி உணவு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்
  13.  இரவில் மட்டும் மூன்று கைப்பிடி அளவு உணவு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்
  14. ஒரு நாள் பகல் நேரத்தில் சுத்தமான எள்ளு புண்ணாக்கு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்
  15. ஒருநாள் இரவில் மட்டும் பசும்பால் சாப்பிட்டு உபவாசம் இருத்தல் 
  16. ஒரு நாள் மோரை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்
  17. ஒரு நாள் முழுவதும் சுத்தமான நீரை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்
  18.  ஒருநாள் முழுவதும் பொறி மாவு அதாவது புழுங்கல அரிசியை வறுத்து நன்கு பொடித்து நெய் தேங்காய் சக்கரை ஆகியவற்றை போட்டு பிசைந்து வைத்து இதை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்
  19.  ஒருநாள் முழுவதும் தினை மாவு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்
  20. தேய்பிறை அன்று ஆரம்பித்து வளர்பிறை முடித்து திரும்ப தேய்பிறை நாட்கள் வரை தினமும் ஒரு கைபிடி அன்னத்தை மட்டும் சாப்பிட்டு பின்னர் தினம் ஒவ்வொரு பிடி அண்ணத்தை அதிகமாகி கொண்டு சுக்லபற்ற முடிந்த பிறகு திரும்ப ஒவ்வொரு பிடி அண்ணமாக குறைப்பது என இது ஒரு வகை உபவாசம் நிறுத்தல்
  21. ஒரு நாள் முழுவதும் வில்வத் தழையையும் நீரையும் அருந்தி உபவாசம் இருத்தல் 
  22. ஒரு நாள் முழுவதும் அரச இளந்தளிகளையும் நீரையும் மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல் 
  23. ஒரு நாள் முழுவதும் அத்தி இளந்தளிகளையும் நீரையும் மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்
  24. இருவேளை உணவுடன் உபவாசம் இருத்தல்
  25. முதல் நாள் ஒருவேளை பகல் உணவு மட்டும் மறுநாள் இரவு மட்டும் உணவுடன் உபவாசம் இருத்தல்
  26. மாமிச உணவுகள் மசாலாக்கள் இல்லாத சைவ உணவுகளை மட்டுமே குறைந்த அளவு சாப்பிட்டு உபவாசம் இருத்தல்
  27. வாழைக்காய் பூண்டு வெங்காயம் பெருங்காயம் ஆகியவை சேர்ந்த உணவுகளை மட்டும் சேர்த்துக் கொள்ளாமல் உபவாசம் இருத்தல்

இந்த உபவாச விரதங்களை எதை கடைபிடித்தால் நல்லது என்கிறீர்களா

உங்கள் உடல் நிலைக்கும் சூழ்நிலைக்கும் தகுந்தவாறு எந்த உபவாசத்தையும் நீங்கள் தேர்வு செய்யுங்கள் அதுவே உங்கள் முடிவாகும்


Monday, February 12, 2024

அண்ணாமலையில் பௌர்ணமி தினத்தன்றுவலம் வருவதற்கு காரணம் என்னவென்று தெரியுமா ?

 அண்ணாமலையில் பௌர்ணமி தினத்தன்றுவலம் வருவதற்கு காரணம் என்னவென்று
தெரியுமா ?



அன்றுதான் அன்னை பராசக்தி,
அருணாசலேஸ்வரரை வலம் வந்து
இடப்பாகம்பெற்றாள். அன்று சந்திரன்
சூரியனிடம் இருந்து #சக்திகளை அதிக
அளவில் பெற்று, அதைவெளியிடும் 


#பூர்ணநிலாவாக உலா வருகிறான்.

அந்த
 ஒளி, மலை மீது பட்டுபிரதிபலிக்கும்போது,
அது நமது உடலுக்கும்  நம்மனதுக்கும் பற்பல நன்மைகளை நமக்குத்தெரியாமலே
செய்கின்றது. 

இதனால்பௌர்ணமி
மலைவலம் சித்தர்களால் சிறப்பாக
போற்றப்படுகிறது.

இன்றும் திருவண்ணாமலையில் #சித்தர்கள்சூட்சும வடிவில் வலம் வருவதாகக்கூறப்படுகிறது.

 
பௌர்ணமி நாள் அன்றுமட்டும்தான்
 கிரிவலம் வரவேண்டுமா?

வருடத்தின் 365 நாளும் மலை வலம் வரலாம்.

பிறந்த நாள், திருமண நாள், மூத்தோர்களின்நினைவு நாள் என்று எந்நாளும்சிவபெருமானை நினைத்து வலம் வரலாம்.

Friday, February 9, 2024

சியாமளா நவராத்திரி பூஜை

 10.02.2024 முதல் சியாமளா நவராத்திரி அனுஷ்டிக்கப்படுகிறது.அனைத்து சக்தி ஸ்தலங்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றது.முக்கியமாக ச்யாமளாவின் அம்சமாகத் திகழும் மதுரை மீனாக்ஷிக்கு சியாமளா நவராத்திரி விஷேசம் என்பது குறிப்பிடத்தக்கது.  

சியாமளா நவராத்திரி பூஜை

தை அமாவாசை கழிந்த மறுநாள் பிரதமையிலிருந்து நவமி வரை 10.02.2024 முதல் 19.02.2024வரை அம்பிகையை, பூரண கலசத்தில் ஆவாஹனம் செய்து, பூஜிக்கலாம். சியாமளா நவராத்திரியில் ஐந்தாவது தினமான வசந்த பஞ்சமியில் ஸ்ரீ சரஸ்வதி தேவி திருஅவதாரம் செய்ததாக ஐதீகம். எனவே, தென்னாட்டில் விஜயதசமி போல், வடநாட்டில் வசந்த பஞ்சமி அன்று வித்யாரம்பம் செய்கிறார்கள். அன்றைய தினம் அம்பிகையை வழிபடுபவருக்கு, கலைகள் அனைத்திலும் நிறைந்த பேராற்றல் கிட்டும்.

சரஸ்வதி தேவியின் தாந்த்ரீக ரூபமே ஸ்ரீ ராஜ சியாமளா தேவி.தாந்த்ரீக முறையில் வழிபடப்படும், தச மஹா வித்யைகளுள் மாதங்கி தேவி ஒன்பதாவது வித்யாரூபமாகப் போற்றப்படுகிறாள். கல்வி அறிவைத் தந்து  நம்மை வல்லவர்களாக்கும் சக்தி படைத்தவள் சரஸ்வதி தேவி. கலைவாணியான சரஸ்வதி தேவியின் ஸ்வரூபமான ச்யாமளாதேவியை பிரதானமாகக் கருதி, ஆராதனை செய்து வணங்கும் நாட்கள் தான் ச்யாமளா நவராத்திரி தினங்களாகும்.

சியாமளா தேவி:- சியாமளா என்றும், 'ஸ்ரீ ராஜ ச்யாமளா என்றும், ஸ்ரீமாதங்கி என்றும், 'மஹாமந்திரிணீ' என்றும் பலவித திருநாமங்களால் போற்றப்படும் ஸ்ரீ அம்பிகை, மதங்க முனிவரின் தவப்புதல்வியாக அவதரித்தருளியவள். தசமஹாவித்யைகளுள் ஒன்பதாவது வித்யையாக அறியப்படுபவள். கலைகள், பேச்சுத்திறன், நேர்வழியில் செல்லும் புத்தி, கல்வி, கேள்விகளில் மிக உயர்ந்த நிலையை அடையும் திறன் ஆகியவற்றுக்கு அதிபதியாக அறியப்படுபவள். வேத மந்திரங்களுக்கு எல்லாம் அதிதேவதை ஆதலால் 'மந்திரிணீ' என்று அறியப்படுபவள். ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் மஹாமந்திரியாக, இவ்வுலகை ஆட்சி செய்து அருளுபவள். இந்த அம்பிகையைப் போற்றும் விதமாகவே ச்யாமளா நவராத்திரியைக் கொண்டாடி வழிபடுகிறோம்.

ஸ்ரீ ராஜ மாதங்கி, ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியால், தன் கரும்பு வில்லில் இருந்து உருவாக்கப்பட்டவள். அம்பிகையின் பிரதிநிதியாக, ராஜ்ய பாரம் நடத்துபவள். அம்பிகையின் முத்ரேஸ்வரியாக, (முத்திரை மோதிரம் தாங்கியவளாக) இருப்பவள். இதை ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம், வெவ்வேறு விதமான புராணங்களிலும் தாந்தீரிக முறைகளிலும் வெவ்வேறு விதமாக அம்பிகையின் திருவுருவம் விவரிக்கப்படுகிறது.

கவி காளிதாசர் அருளிய ஸ்ரீ ச்யாமளா தண்டகம், தியான ஸ்லோகத்தில், அம்பிகை, மாணிக்கக் கற்கள் பதித்த வீணையை வாசிப்பதில் விருப்பம் உடையவளாக, எட்டுத் திருக்கரங்கள் உடையவளாக, மரகதப் பச்சை வண்ணம் கொண்டவளாக, திருமார்பில் குங்குமச்சாந்து தரித்தவளாக, தன் திருநெற்றியில், சந்திரகலையை அணிந்தவளாக, கரங்களில், கரும்பு வில், மலரம்பு, பாச அங்குசம் கொண்டவளாக சித்தரிக்கப்படுகிறாள். அம்பிகையின் திருக்கரங்களில் கிளியும் இடம்பெற்றிருக்கிறது.

இதில் அம்பிகையின் மரகதப் பச்சை வண்ணம், ஞானத்தைக் குறிக்கிறது. வித்யாகாரகனான புத பகவானுக்கு உரிய நிறமும் பச்சையே. வீணை, சங்கீத மேதா விலாசத்தையும், கிளி, பேச்சுத் திறமை வாய்க்க அம்பிகையின் அருள் அவசியம் என்பதையும் ஆத்ம ஞானத்தையும் குறிக்கிறது. மலரம்பு கலைகளில் தேர்ச்சியையும், பாசம் ஈர்க்கும் திறனையும், அங்குசம் அடக்கியாளும் திறனையும், கரும்பு உலகியல் ஞானத்தையும் குறிப்பதாகக் கருதப்படுகிறது.

சில நூல்களில், ஸ்ரீ சியாமளா, பச்சை வண்ணம் உடையவளாக, சிரசில் சந்திரகலையை அணிந்தவளாக, நீண்ட கேசமும் புன்முறுவல் பூத்த அழகுத் திருமுகமும் உடையவளாக, இனிமையான வாக்விலாசம் உடையவளாக, ஆகர்ஷணம் பொருந்திய திருவிழிகள் உடையவளாக, கடம்ப மாலையும், பனை ஓலையினாலான காதணி மற்றும் பல்வேறு ஆபரணங்கள் தரித்து தாமரை மலர் மீது அமர்ந்திருப்பவளாகவும் சித்தரிக்கப்படுகிறாள்.

கடல்போல் விரிந்த ஞானத்திற்கும், உள்முகமான அறிவாற்றலுக்கும் மாதங்கி தேவியே அதிதேவதை. மனதில் தோன்றுவதை சாமர்த்தியமாக வெளிப்படுத்தும் நல்லாற்றலும், எதையும் கிரகிக்கும் திறனும், கிரகிப்பதைப் பிறர் விரும்பும் வண்ணம் வெளிப்படுத்தும் திறனும், ஸ்ரீமாதங்கியின் அருளாலேயே சித்திக்கும். மேலும், ஒருவர் பேசும் வாக்கியத்தின் மத்திமப் பகுதியே அவர் மனதில் நினைத்திருப்பதை வெளிப்படுத்துவதாக அமையும்.இந்த மத்திமப் பாகத்துக்கும் மாதங்கி தேவியே அதிதேவதை. நுண்ணறிவுக்கும் அதை வெளிப்படுத்தும் திறனுக்கும் மனதை அறிவின் மூலம் கட்டுப்படுத்தி அம்பிகையிடம் லயிக்கச் செய்யும் ஆற்றலுக்கும் அம்பிகையின் அருள் அவசியம்.

ஜெகன் மாதா ஸ்ரீலலிதா மகாதிரிபுர சுந்தரியின் கையிலிருக்கும் கரும்பு வில்லின் அதிதேவதையான சியாமளா தேவி, அறிவு என்னும் தத்துவத்தின் தலைவியாக விளங்குபவள். மனம் என்னும் வில் தான்,  அறிவு என்னும் அம்பை  கட்டுப்படுத்துகிறது.எனவே சியாமளா தேவியின் அருள் இருந்தால் தான் மனதையும் அறிவையும் அடக்கி , அம்பிகையிடம் நம்மை லயிக்கச் செய்ய முடியும்.

தனது மந்திரியான சியாமளா தேவியின் ஆலோசனை பெற்றே அம்பிகை ஸ்ரீலலிதா பரமேஸ்வரி எதையும் செய்வாள்.  இதனால் சியாமளா தேவிக்கு மந்த்ரிணி என்னும் பெயருமுண்டு. அம்பிகையின் வலப்புறம் வீற்றிருக்கும் பெருமை கொண்ட சியாமளா தேவி,மன இருளை அகற்றி ஞான ஒளியைத் தருபவள்.

தேவியின்  ஒன்பதாவது வடிவமான சியாமளா தேவியை  உஜ்ஜயினியில் வணங்கியதால் மூடனாயிருந்த காளிதாசன் மகாகவியானான் என்கிறது புராணம். மூடமாய் முடங்கிக் கிடந்த காளிதாசனுக்கு அன்னை சியாமளா தேவியின் பெருங்கருனை மகாகவியாக மாற்றியது.மதங்க முனிவரின் மகளாகப் பிறந்ததால் மாதங்கி என்றும் அழைக்கப்படுகிறாள்.

சியாமளா தேவியை தியானிப்பவர்களுக்கு வாக்கு , இசை, கல்வி, கேள்விகளில் நல்ல தேர்ச்சி போன்றவை சித்திக்கும்.

மாதங்கியின் பதினாறு பெயர்களைப் பற்றி பார்ப்போம்.
சங்கீத யோகினி, சியாமா, சியாமளா, மந்த்ர நாபிகா, மந்த்ரிணி, சசிவேசானி, ப்ரதானேசி, சுகப் பிரியா, வீணாவதி, வைணிகி, முத்ரிணி, பிரிய கப்பிரியா, நீபப்பிரியா, கதம்பேசி, கதம்பவன வாசினி, சதாமாதா ஆகியவையாகும்.
மாதங்கி தேவி எட்டு கரங்களை உடையவள். அவளுடைய ஒரு திருக்கரத்தில்உள்ள சம்பா கதிர், உலகியல் இன்பங்களையும், மற்றொரு கரத்திலுள்ள தாமரை மலர், கலை உள்ளத்தையும்,இன்னொரு கரத்திலுள்ள பாசம் ஈர்ப்பு சக்தியையும்,வேறொரு கரத்திலுள்ள அங்குசம் அடக்கியாளும் திறனையும்; காரிகை உலகியல் ஞானத்தையும்; கிளி ஆத்ம ஞானத்தையும், இரு கைகளில் ஏந்திய வீணை சங்கீத ரசனையையும் அருளுகின்றன. மேற்கண்ட வடிவுடைய தேவியையே காளிதாசனின் சியாமளா தண்டகம் கொண்டாடுகிறது. சியாமளா தண்டகத்தை துதிப்பவர்களுக்கு தேவி பேரருள் புரிகிறாள்.
 காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் சியாமளா தேவியின் திருவுருவத்தைக் காணலாம். மந்திர சாஸ்திரப்படி மதுரை மீனாட்சியே சியாமளா தேவியாக விளங்குகிறாள் என்பது சான்றோர் நம்பிக்கை. அதனால் தான்  அங்கு எண் கை வடிவமும் சக்கரமும் இதன் அடிப்படையிலேயே அமைக்கப்பட்டுள்ளன.
                                                                                                                                                                                         சியாமளா தேவிக்கு லகு மாதங்கி, வாக்வாதினி, நகுலி எனப்படும் மூன்று அங்க- உபாங்க தேவதைகள் உள்ளனர். அதற்கான விளக்கங்களையும் தெரிந்துக்கொள்வோம்.
 
                                                                                                                                                                                                        லகு மாதங்கி:- மாணிக்கமயமான வீணையை வாசிப்பவளும், அழகான வாக்கு உடையவளும், நீலநிற ஒளி பொருந்திய உடலினளும், மதங்க முனிவரின் மகளுமான இவள் அருள் இருந்தால் அனைத்து கலைகளும் லகுவாகும்.
 
வாக்வாதினி:- நம் சந்தேகங்களை குருவிடம் கேட்டு அறிய வேண்டும் என்பதே வாக்வாதினியின் பொருள். அடிக்கடி குருவிடம் சென்று நம் சந்தேகங்களைக் கேட்டாலொழிய உண்மைப் பொருளை அறிய முடியாது. சில விஷயங்களை ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்தால்தான் உண்மையை உணர முடியும்.
 
நகுலி :- ஞானத்தை அடைந்தால்கூட தவறு செய்வதற்கான சில சந்தர்ப்பங்கள் ஏற்படலாம். விஷம் போன்ற அத்தவறுகளால் நாம் பாதிக்கப்படாமல் காப்பாற்றுபவள் நகுலி. நகுலம் என்றால் கீரிப்பிள்ளை. கீரியைக் கண்டு விஷப் பாம்புகள் அஞ்சி விலகு வதைப்போல நகுலியின் அருளால் தவறுகள் நம்மை விட்டு விலகிச் செல்லும் என்பது உட்கருத்து.

சியாமளா சகஸ்ரநாமம், ராஜமாதங்கி சகஸ்ரநாமம் என இரண்டு அதியற்புதமான சகஸ்ரநாமங்கள் உள்ளன. இவற்றைத் துதித்துப் பயனடையலாம். காளிதாசனின் சியாமளா தண்டகமும் மிக அற்புதமானதே. ஆதிசங்கரரின் மீனாட்சி பஞ்சரத்னத்தைத் துதித்தாலும் சிறப்பான பயன்களைப் பெறலாம்.
                                                                                                                                                                                                ச்யாமளா நவராத்திரி  நாட்களில் ச்யாமளா தேவியை வணங்கி கல்வி கடவுளான சரஸ்வதியில் அருளோடு சரஸ்வதி யோகத்தையும் பெற்று மகிழ்வோமாக!  



🪷🪷🪷🪷🪷🪷

செல்வத்துக்கு அதிபதியாக திகழும் குபேரன்:

 பக்தியுடன் பூஜிப்போர்க்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருள்பவர். அழகாபுரி பட்டணத்தில், அழகிய அரண்மனையில், மீன ஆசனத்தில் அமர்ந்து ஆட்சி புரிபவர். த...