கருணை...
1) கருணை கடவுளின் குணம். கருணை நிரம்பிய மனிதர்களை பார்த்தால் கடவுளை பார்த்த மாதிரி இருக்கின்றது என்று சொல்கின்றோம். கருணை என்பது இரக்கம் அமைதி பணிவு பொறுமை இனிமை தெய்வீகம் நிதானம் சகிப்புத்தன்மை தியாகம் மன்னிப்பு மறத்தல் சுப எண்ணம் இவற்றையெல்லாம் உள்ளடக்கியது. இந்த குணங்கள் எல்லாம் உள்ளடங்கியதால் தான் கடவுளை கருணைக்கடல் என்று அழைக்கின்றோம்.
2) கருணை என்பது அறியாமையில் இருப்பவர்களை பார்த்து ஆதரவற்றவர்களை பார்த்து பசித்திருப்பவர்களை பார்த்து உதவிக்கு ஆட்கள் இல்லாமல் தவிப்பவர்களை பார்த்து நலிவடைந்தவர்களை பார்த்து நோயினால் அவதியுருபவர்களை பார்த்து பிரச்சினையால் சிக்கி தவிப்பவர்களை பார்த்து ஏற்படுகின்றது. கருணை உடையவன் பிறருக்காக இறைவனிடம் பிரார்த்திக்கின்றான். கருணை நிரம்பியவன் தான் பிறருக்கு உதவுபவனாக இருக்கின்றான். இரக்கம் என்பது ஆன்மீகம். கருணை என்பது இரக்கம் கலந்த தெய்வீகம். கருணை உடையவன் ஒருபோதும் பிறருடைய குறைகளை பார்ப்பதில்லை. பிறருடைய தவறுகளை மனதில் வைப்பதில்லை. அவன் தன்னுயிரைப் போல பிற உயிர்களையும் மதிக்கின்றான். கருணை என்பது நீண்ட நாட்கள் மழையே பார்க்காத நிலத்தில் விழும் மழைத்துளிகளை போன்றது.
3) கருணை வெளிப்படும் இடம் கண்கள். கருணை நிரம்பியவர் அமைதி நிறைந்த வார்த்தைகளையும் ஆறுதல் தரும் இன் சொற்களையும் பேசக்கூடியவர். கருணை நிரம்பியவரிடம் நான் எனது என்ற அகந்தை துளியும் இருக்காது. கருணை நிரம்பியவரிடம் தீயவை எதுவும் நெருங்காது. அவரது தோற்றமே அனைவரையும் வணங்க வைக்க கூடியதாக இருக்கும். கருணை நிரம்பியவருக்கு சமநிலையான அன்பானது அனைத்து உயிர்களிடமும் இருக்கும். கருணையிலிருந்து தான் அன்பு உற்பத்தி ஆகின்றது. கருணையில் இருந்து வெளிப்படும் அன்பு சுயநலமற்றதாக இருக்கின்றது. கருணை நிரம்பியவர் தன்னை தாழ்த்திக் கொண்டு பிறரை உயர்த்துபவராக இருப்பார். கருணை நிரம்பியவரால் எந்த சூழ்நிலையிலும் ஒருவர் துக்கமடைய மாட்டார்.
4) கருணை நிரம்பியவர் அனைவருக்கும் விருப்பமானவராக இருப்பார். அவர் பொய் உடம்பை மறந்து மெய்யான ஆத்ம ஜோதியில் நிலைத்திருப்பார். கருணை நிரம்பியவரிடத்தில் பேதங்கள் இருக்காது. அவருக்கு கடவுள் ஒருவர் தான் இந்த உலகமே அந்த கடவுளின் குடும்பமாக எண்ணி வாழக்கூடியவராக வாழ்ந்திருப்பார். கருணை என்பது இறைவனை சந்திப்பதற்கான விமானம் ஆகும். கருணை நிரம்பியவரிடம் ஆசிகள் நிறைந்திருக்கும். ஆசிகளை மட்டுமே பிறருக்கு வழங்கக் கூடியவராக கருணை நிறைந்தவர் வாழ்ந்திருப்பார். கருணை போதிக்காமலேயே அனைத்து பாடங்களையும் ஒருவருக்கு கற்றுத் தந்துவிடும். எனவே கருணை மிக்கவரே குருவாக முடியும். கருணை உற்பத்தியாகும் இடம் சத்குரு தந்தை ஈசன் ஆவார்.கடவுள் உயிர்களுக்கு கொடுக்கும் முதல் ஞானம் கருணை என்பதாகும்.
5) கருணை நிரம்பி இருக்கும் இடத்தில் களஞ்சியம் நிரம்பி இருக்கும். கருணை தானாகவே அனைத்து செல்வங்களையும் கொண்டு வந்து சேர்க்கும். கருணை தான் உண்மையான பிரார்த்தனை. கருணை தான் மெய்யான தவம். தனக்குத்தான் காட்டப்படும் கருணை என்பது உயர்ந்த கர்மாவை செய்வது. பிறருக்கு காட்டப்படும் கருணை என்பது உயர்ந்த கர்மாவை எப்படி செய்வது என்று கற்றுக் கொடுப்பது. கருணை இருக்கும் இடம் கோவிலாகும் அங்கே கடவுள் குடி கொண்டிருப்பார். கருணை நிரம்பியவருக்கு எதிரிகள் கிடையாது. ஒருவேளை எதிர்க்கும் தன்மையுடன் வந்தாலும் கருணை நிறைந்த முகத்திற்கு முன்பு எதிரி கூட பணிந்தவராக ஆகிவிடுவார். உண்மையில் கருணை நிறைந்தவரை யாருக்கும் எதிர்க்க துணிவு வராது. கருணை என்பது இறைவனிடம் வாங்கிய வரம். அந்த வரத்தை வாங்கியவர்கள் தான் மகான்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள்.
6) கருணை நிரம்பியவர் யாருக்காவது பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பார். அல்லது யாருக்காவது உதவ வேண்டும் என்று ஓடிக்கொண்டே இருப்பார். கருணை நிரம்பியவரின் செயல்கள் கடவுளின் செயல்களுக்கு ஒப்பாக இருக்கும். கருணை நிரம்பியவரிடத்தில் பாவம் இருக்காது. அவர் தெய்வீக ஒளி பொருந்தியவராக பேரானந்த சொரூபமாக ஆழ்ந்த மௌனம் உடையவராக விளங்குவார். அவரிடம் சத்தியத்தின் உள்ளார்ந்த தோற்றம் வெளிப்படும்.
7) கருணை நிரம்பிய மனதில் தான் நல்ல எண்ணங்கள் உற்பத்தி ஆகின்றன. கருணை என்பது இருளடைந்த இடத்தில் சுடர்விடும் ஜோதி. இந்த ஜோதியானது அஞ்ஞான இருளை போக்க வல்லது. கருணை என்பது அனைத்து நற்குணங்களுக்கும் விதை போன்றது. கருணைமனம் உடையவர் தான் அனைவர் மீதும் நல் எண்ணங்களை வைக்கின்றார். கருணை நிரம்பியவரின் இரண்டு வார்த்தைகள் கூட ஒருவரின் மனதை குளிர்ச்சி படுத்தி விடும். கருணை என்ற குளிர்ச்சி சோதனையால் நொந்து வெந்த மனதை ஒரு வினாடியில் அமைதிப்படுத்தி குளிர்ச்சி அடைய வைத்து விடும். கருணை நிரம்பியவரின் கனவில் தான் தெய்வம் வரும். கருணை நிரம்பியவருக்கு எதுவும் கேட்காமலே கிடைக்கும். கருணை நிரம்பியவர் மெதுவாக நிதானமாக பேசுவதால் அவருடைய வார்த்தையானது உள்ளத்திற்கு ஆறுதல் அளிக்கக் கூடியதாக இருக்கும். கருணை நிரம்பியவரின் மனம் மழை சாரலில் தென்றல் வீசுவதை போல மென்மையானதாக மகிழ்ந்திருக்கும்.
எனவே நாம் ஒவ்வொருவரும் கருணை நிரம்பியவர்களாக வாழ்வோம். இறைவனுக்கு விருப்பமான வாழ்க்கை கருணை மனமுடைய வாழ்க்கை. இந்தக் கருணை மனம் உடைய வாழ்க்கை தான் இறைவன் அமரும் சிம்மாசனம். கருணை இருக்கும் இடத்தில் கடவுள் இருப்பார் கடவுள் இருக்கும் இடத்தில் கருணை இருக்கும். மனிதனாக பிறந்ததன் அடையாளம் கருணை. கருணையுடன் வாழ்ந்து கருணையை அனைத்து உயிர்கள் மீதும் பொழிந்து கருணைமிக்க தந்தை ஈசனின் மலரடி சேரும் மானிடர்களாய் வாழ்ந்து செல்வோம். நல்லது. வாழ்த்துக்கள். ஓம் சாந்தி
No comments:
Post a Comment